×

‘மினி கல்யாண கட்டா’திருப்பதியிலேயே இனி மொட்டை அடிக்கலாம்: தேவஸ்தானம் ஏற்பாடு

திருமலை: திருப்பதியிலேயே இனி மொட்டை அடிக்கும் விதமாக ‘மினி கல்யாண கட்டா’வுக்கு தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஏழுமலையானை தரிசிக்க வாரிமெட்டு மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் தலைமுடி காணிக்கை செலுத்த தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, நேற்று மினி கல்யாண கட்டா திறப்பு விழா நடந்தது. இதனை  தேவஸ்தான துணை செயல் அதிகாரி சாந்தி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர், பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தங்களது தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். கல்யாண மண்டபத்திற்கு அருகில் இந்த மினி கல்யாண கட்டா அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களும், ஏழுமலையானை தரிசிக்க வாரிமெட்டு மலைப்பாதையில் படிக்கட்டில்  திருமலைக்கு செல்வோரும் தலைமுடி காணிக்கை செலுத்திக் கொள்ளலாம். மொட்டை அடிக்கும் பக்தர்களுக்காக குளியலறைகள் மற்றும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், உதவி செயல் அலுவலர் தனஞ்செயலு, கண்காணிப்பாளர்  செங்கல்ராயலு மற்றும் அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.

Tags : Tirupati , Tirupati, Devasthanam, arranged
× RELATED திருப்பதி கோயிலில் ரூ.3.09 கோடி காணிக்கை